Monday, April 14, 2014

குலதெய்வ வழிபாடும், பங்குனி உத்திரமும்

ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தை ஒட்டி, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் எங்கள் சொந்த ஊரான கம்பரசம்பேட்டையில் ஒன்று கூடுவோம்.  உத்திரத்தன்று காவடி எடுப்பதும், அதற்கு ஒருநாள் முன்னரோ, பின்னரோ எங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவதும் வழக்கம்.  இந்த வருடமும் அப்படியே.

*

குலதெய்வக் கோயில் ட்ரிப்

புதுக்குடி ஒரு அழகான கிராமம். (இதுதான் அந்தக் கிராமம்.) :)


அங்குதான் எங்கள் குலதெய்வம் கோழிப்பரமாயியின் கோவில் உள்ளது.  பூசாரி வருவதற்குக் கொஞ்ச நேரம் ஆகும் என்பதால், முதலில் காலை உணவை மரத்தடியிலே நிம்மதியாக முடித்தோம்.



வெயில் மிதமாகச் சுட ஆரம்பிக்கும் நேரத்தில், மரத்தடியில் எல்லோரும் உட்கார்ந்து கொண்டு இட்லியும், காரசாரமாக சட்னி சாம்பாருடன் உள்ளே தள்ளும் போது... ஆகா!  எத்தனை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும் இதற்கு ஈடாகுமா!



பூசாரி வந்ததும், இந்தக் கோவிலில் பூஜைகளை முடித்துக்கொண்டு அடுத்து சுந்தரபாண்டி கோவிலுக்குச் சென்றோம்.

*

குலதெய்வ வழிபாடு, நம் கலாசாரத்தின் ஒரு இன்றியமையாத பகுதி.  பெரும்பாலும் குலதெய்வங்கள் கிராம தேவதைகளாகவே இருப்பது வழக்கம்.  அவற்றிற்குப் பின்னால் சுவாரசியமான கதையும் ஏதாவது இருக்கும்.  அப்படி ஒரு கதை எங்கள் குலதெய்வத்துக்கும் உண்டு.

அந்தக் கிராமத்தில் இருந்த அக்கா, தங்கை இருவர் திருமணமாகி அவரவர் கணவர் வீட்டில் வசித்து வந்தனர்.  வெளியூரில் இருந்த அக்கா, ஒருநாள் தங்கையைப் பார்க்க வந்திருந்தாள்.  தங்கைக்குக் குழந்தைகள் மொத்தம் பத்து.  அக்காவுக்கோ குழந்தைகள் இல்லை.  கல்யாணம் ஆன பின்பு அப்போதுதான் அக்கா முதல் முறையாகத் தங்கையைப் பார்க்க வருவதால், அவளுக்குக் குழந்தைகள் பிறந்த விஷயம் தெரியாது.

தங்கையிடம் பேசிய ஊர்க்காரர்கள், "உன் அக்காவுக்குக் குழந்தைகள் இல்லை.  உன் குழந்தைகளைப் பார்த்தால், அவள் வருத்தப்பட்டு அதனால் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகலாம்.  அதனால் உனக்குக் குழந்தைகள் பிறந்த விஷயத்தை மறைத்துவிடு" என்று உசுப்பிவிட்டனர்.  அவர்கள் பேச்சைக் கேட்ட தங்கை, தன் பத்துக் குழந்தைகளையும் பெரிய கூடைகளில் மறைத்து வைத்தாள்.

அக்கா வந்து தங்கையைச் சந்தித்தாள்.  குடும்ப விவகாரங்கள் எல்லாம் பேசிவிட்டு, அவள் தன் தங்கையிடம் "உனக்குக் குழந்தைகள் எத்தனை?" என்று கேட்க, தங்கையோ "எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை" என்று சொல்லிவிட்டாள்.

ஊருக்குத் திரும்புவதற்காக அக்கா கிளம்பிய சமயம், கவிழ்த்து வைத்திருந்த கூடைகளிலிருந்து கிச்மூச்சென்று சத்தம் வருவதைக் கவனித்தாள்.  "என்ன கூடைக்குள்?" என்று தங்கையிடம் கேட்க, அவளோ "அது நான் வளர்க்கும் கோழிக் குஞ்சுகள்" என்றாள்.  மேலே எதுவும் பேசாமல் அக்கா ஊருக்குக் கிளம்பினாள்.

வழியனுப்பிவிட்டு வந்த தங்கை கூடையைத் திறக்க, குழந்தைகள் எல்லாம் கோழிக் குஞ்சுகளாக மாறியிருந்தன.  பதறிப்போன தங்கை, உடனே அக்காவிடம் ஓடி மன்னிப்புக் கேட்டாள்.  தன்னிடமிருந்த கோழிக்குஞ்சுகளில் ஆறைத் தன்னிடம் வைத்துக் கொண்டு நான்கைத் தன் அக்காவிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னாள்.

அந்தத் தங்கைதான் எங்கள் குலதெய்வம் கோழிப்பரமாயி.  அவள் அக்கா சுந்தரபாண்டி.

(இந்தக் கதையை எனக்குச் சொன்ன அம்மாவுக்கு நன்றி! :) )



தங்கை தெய்வமாக வணங்கப்படும் கோழிப்பரமாயி கோயிலில், அவள் விக்கிரகத்துடன் அருகில் அவள் ஆறு குழந்தைகளும் விக்கிரகங்களாக செதுக்கப்பட்டுள்ளன.




அக்கா சுந்தரபாண்டி கோயிலில் அவள் விக்கிரகமாகவும், அவள் வளர்த்த நான்கு கோழிக்குஞ்சுகள் கற்களாகவும் குறிக்கப்பட்டு இன்றும் பூஜிக்கப்படுகின்றன.




*

பங்குனி உத்திரக் காவடி

மறுநாள் பங்குனி உத்திரத்தன்று, காலை ஆறு மணிக்கு சிறு குழுக்களாக, குடும்பத்தில் பாதி பேருக்கு மேல் காவிரி நதிக்கரைக்கு வந்தோம்.



காவடிக்குப் பூஜை செய்ய ஆரம்பிக்கும் முன்னர், பெரியவர் சிறியவர் அனைவரும் காவிரியில் ஆட்டம் போட்டோம்.


பின்பு, முதலில் காவடியை சுத்தம் செய்யும் வேலை.  இதிலும் அனைவரின் பங்கும் உண்டு.


இது முடிந்ததும், பூஜை.  காஞ்சிபுரத்தில் உள்ள என் தம்பி சிவராமனும், தாம்பரத்தில் உள்ள என் அண்ணன் சீதாராமனும் மந்திரங்களைச் சொல்ல, காவடி எடுக்கப்போகும் இன்னொரு தம்பி ராஜாராமன், பூஜையைச் செய்தான்.


பூஜையின் ஒரு பகுதியாக, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், திரவியப் பொடி என்று அபிஷேகம் செய்யப்பட்டது.

பூஜை முடிந்ததும், எங்கள் பெரியப்பா சங்கரராமன் எடுத்துக் கொடுக்க, தம்பி ராஜாராமன் காவடியைத் தூக்கிக் கொள்ள, நதியைக் கடந்து ஊருக்குள் நுழைந்தோம்.

பிள்ளையார் கோவிலில் சிதறு தேங்காய் போட்டுவிட்டு, அக்ரஹார வீதி வழியாக 'வேல் வேல் வெற்றி வேல்' என்று கோஷங்கள் முழங்க ஒவ்வொரு வீட்டிலும் காவடிக்கான மரியாதை செய்யப்பட, கடைசியில் ஊர் சிவன் கோவிலில் போய் முடித்தோம்.

*

சமூக வாழ்க்கையிலிருந்து பெரும்பாலும் விலகி ஒரு செயற்க்கைத்தனமான, பெரும்பாலும் மனிதர்களுடன் ஓட்டில்லாத ஒரு வாழ்க்கை முறை நம்மில் பலருக்கு ஏற்பட்டு, அது ஒரு கட்டத்தில் வெறுப்பையும் கூட்ட ஆரம்பித்து விடுகிறது.  அப்படிப்பட்ட நேரங்களில், இப்படிப்பட்ட விழாக்களில் பங்கு பெறுவது, நிச்சயம் நம் பழைய வாழ்க்கை முறையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்; அதைப் பாதுகாத்தும் வைக்கும்.

ஏன் இப்படிப் பாதுகாக்க வேண்டும்?  என்னைப் பொறுத்தவரை, உலகமயமாக்கலினால் பல நன்மைகள் இருந்தாலும், local economy மிகவும் முக்கியமானது என்று நம்புகிறேன்.  என்றாவது ஒருநாள், நாம் திடீரென்று local economy-இன் அவசியத்தை உணரும்போது, இந்த அனுபவங்கள் உதவியாக இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை!

Friday, February 02, 2007

எளங்காத்து வீசுதே

பிதாமகன் படத்திலிருந்து 'எளங்காத்து வீசுதே' கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை எங்கோ கொண்டு சென்றது அந்தப் பாடல்! அதன் லிரிக்ஸ் இதோ:

எளங்காத்து வீசுதே எச போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே
கரும் பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

பின்னி பின்னி சின்ன எழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
ஒண்ணுக்கொண்ணு தான் இணஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமஞ்சு இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்கு தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு, யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல (எளங்காத்து வீசுதே...)

மனசுல என்ன ஆகாயம்
தினம் தினம் அது புதிர் போடும்
ரகஸியத்தை யாரு அறிஞ்சா?
அதிசயத்தை யாரு புரிஞ்சா?
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம் தோறும்
மலர் தொடுக்க நாறை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு?
ஆலம் விழுதிலே ஊஞ்ஜல் ஆடும் கிளியெல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே,
தாயின் மடிய தேடி ஓடும் மலை நதி போலே....... (கரும் பாறை மனசுல...)

Sunday, January 28, 2007

தமிழ்ப் படுத்து

பிரபலமான ஒரு தமிழ் வார இதழைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டுரையில் "பூனை சாக்குப் பையிலிருந்து வெளியில் வந்து விட்டது" என்ற சொற்றொடரைப் படித்தேன். "Cat is out of the bag"என்பது தமிழில் இப்படி ஆகி விட்டதோ?

இந்த சொற்றொடர்களின் ஆங்கில ஆரிஜின்னை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்:

1. மரத்தைத் தொடு.
2. மேலே தூக்கியெறி.
3. வீட்டு ஓட்டம்.
4. மேலே கொடு.
5. மூளையை எடுத்தல்.
6. விரலை குறுக்காக வை.

இது சும்மா ஒரு ப்ரிவ்யூதாம்மா, ரியல் ஷோ அப்பாலிக்கா வரும்!

Sunday, January 14, 2007

So called ஹைகூ!

ஏனோ தெரியவில்லை, வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஹைகூ ரேஞ்சில் கிறுக்க ஆரம்பித்துள்ளேன். ஸாம்பிளுக்கு சில:

மழை!

வானத்தில் படர்ந்த மேகங்களால் பூமிக்குக் கிடைத்ததோ மழை! என்
இதயத்தில் படர்ந்த உன் நினைவுகளால் என் கண்களில் மட்டுமே மழை!

(Old style!)

VAT - டின் விளைவு!

VAT - டினால் நிகழ்ந்ததோ விலை குறைப்பு! உன்
கூட்டினால் நிகழ்ந்ததோ என் நிலை குலைப்பு!

(எகானமிஸ்ட்ஸ் மன்னிக்கவும்!)

வண்டி!

கண்களால் இழுக்கின்றாய் நீ என்னை சுண்டி! என் இதயம்
காக்கை கொத்தி நாசப்படுத்திய மீன் பாடி வண்டி!

(காசிமேட்டுக்காரர்களுக்கு சுலபமாகப் புரியும்!)

Monday, September 04, 2006

ஊர்வலம்

இரவு உணவை முடித்து விட்டு, லேப்டாப்பை எடுத்து நெட்டில் கனெக்ட் செய்யப் போனேன். இளையராஜாவின் அன்னக்கிளி ரெக்கார்டிங்கில் சதி செய்தது போல சரியான நேரத்தில் கரண்ட் கட்டாகிப் போனது. 'என்னடா இது, இந்த மதுரைக்கு வந்த சோதனை' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கையில், தூரத்தில் தவில் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது. இப்போது நாதஸ்வரமும் ஜால்ராவும் சேர்ந்து கேட்கத் தொடங்கியது.

'மௌலி, சாமி வந்திருக்கு பார்.' - மாமா அழைத்தார். எழுந்து வெளியில் போனேன். தெருவில் ஒரு மாட்டு வண்டியின் மேல் ஒரு சிறிய தேரைச் செய்திருந்தார்கள். மாட்டைக் கட்டும் திசையில் தேரிலே நான்கு குதிரைகளைக் கட்டியிருந்தார்கள் (பொம்மைக் குதிரைகள் தான்!). தேரிலே அம்மன் தங்க, வைர நகைகளில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். தேர் எங்கள் வீட்டைக் கடந்து இடது பக்கமாக இருந்த டொக்கு சந்தில் திரும்பியது. இருபது அடி அந்த சந்தில் சென்றதும், தேர் யூ-டர்ன் அடித்தது. அப்போதுதான் அந்த விஷயத்தைக் கவனித்தேன்.

தேரின் உச்சியில் அணைந்து அணைந்து எரியும் ஒரு சிகப்பு பல்பைப் பொருத்தியிருந்தார்கள். பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது; அதே சமயம் ஆம்புலன்சை ஞாபகப் படுத்தியது. உடனே எனது அறிவுஜீவித்தனமான மூளையில் ஒரு பல்ப்: - சாதாரணமாக பேஷண்ட் ஆம்புலன்சில் இருப்பார், டாக்டர் வெளியில் காத்திருப்பார்; இங்கு டாக்டர் (அம்மன்) ஆம்புலன்சில் இருக்கிறார், பேஷண்ட்கள் (பக்தர்கள்) எல்லாம் வெளியில் காத்திருக்கிறார்கள் என்று. ("டேய், ஓவர் ஸீன்டா" என்று என் மனசாட்சி மனிதன் கிண்டல் செய்கிறான்.)

திடீரென்று தேருக்குப் பத்தடி முன்னால் வெளிச்சம் அடித்தது. என்னவென்று பார்த்தால் யாரோ ஒரு ப்ரகஸ்பதி கரண்ட் கம்பத்தில் கயிரைக் கட்டி அதில் சர வெடியையும், சாட்டை வத்தியையும் கொளுத்திக் கொண்டிருந்தான். இறங்கிப் போய் நாலு அறை விடலாம் போலிருந்தது. அம்மனைப் பார்த்தபடி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன்.

- ஊர்வலம் தொடரும்

Sunday, September 03, 2006

வேதாள ப்ரொக்ராம்

நீண்ட நாட்களாக முடிக்காமல் வைத்திருந்த ஒரு ப்ரொக்ராமை எழுதிக் கொண்டிருந்தேன். விக்ரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் போல அது என்னைப் படுத்திக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அதைக் கொஞ்சமாக வொர்க் செய்ய வைத்துவிட்டு வலையை மேய ஆரம்பித்தேன். திருவாளர் "டுபுக்கு"-வின் ப்ளாக்கின் மேல் எனக்கு அலாதிப் ப்ரியம். சிறிது நேரம் அவர் ப்ளாக்கை மேய்ந்தேன். தூங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, திடீரென என் ப்ரொக்ராம் ஞாபகம் வந்தது. இன்னும் ஒரு தடவை அதை டெஸ்ட் செய்து விடலாமே என்று தோன்றியது. ஆரம்பித்தேன். நிஜமாகவே வேதாளம் போல ப்ரொக்ராம் வேறு சில இடங்களில் பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தது.

உடனே எனக்கு சிங்கப்பூரில் இருந்த போது நண்பர் சிவா அவர் ப்ரொக்ராம் பற்றி அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது -

"மாப்ளே! என் க்ளையன்ட் ரொம்ப ப்ரச்னை பண்ணிணா அவனை ஒரே வரியில ஸைலென்ட் ஆக்கிடுவேன்."

"என்ன அது?"

"ப்ரச்னை பண்ணிணா என் ப்ரொக்ராமை அவன் சிஸ்டம்ல ரன் பண்ணிடுவேன்னு சொல்லிடுவேன். பேசாம போயிடுவான்."

ம்... நாளைக்கு நானும் இதைத்தான் செய்ய வேண்டுமென்ற முடிவோடு படுக்கச் சென்றேன்.

Tuesday, August 15, 2006

வணக்கம்!

அப்பாடா. ஒரு வழியாகத் தமிழில் பதிவிட வழி கிடைத்துவிட்டது. தமிழ்.நெட்-க்கு நன்றி.
இனி உலகெங்கும் உள்ள தமிழ்க் குடிமக்களை நான் எனது எழுத்துக்களால் பாடாய்ப் படுத்துவேன் என்று எச்சரிக்கிறேன். :-)