Monday, April 14, 2014

குலதெய்வ வழிபாடும், பங்குனி உத்திரமும்

ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தை ஒட்டி, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் எங்கள் சொந்த ஊரான கம்பரசம்பேட்டையில் ஒன்று கூடுவோம்.  உத்திரத்தன்று காவடி எடுப்பதும், அதற்கு ஒருநாள் முன்னரோ, பின்னரோ எங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவதும் வழக்கம்.  இந்த வருடமும் அப்படியே.

*

குலதெய்வக் கோயில் ட்ரிப்

புதுக்குடி ஒரு அழகான கிராமம். (இதுதான் அந்தக் கிராமம்.) :)


அங்குதான் எங்கள் குலதெய்வம் கோழிப்பரமாயியின் கோவில் உள்ளது.  பூசாரி வருவதற்குக் கொஞ்ச நேரம் ஆகும் என்பதால், முதலில் காலை உணவை மரத்தடியிலே நிம்மதியாக முடித்தோம்.



வெயில் மிதமாகச் சுட ஆரம்பிக்கும் நேரத்தில், மரத்தடியில் எல்லோரும் உட்கார்ந்து கொண்டு இட்லியும், காரசாரமாக சட்னி சாம்பாருடன் உள்ளே தள்ளும் போது... ஆகா!  எத்தனை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும் இதற்கு ஈடாகுமா!



பூசாரி வந்ததும், இந்தக் கோவிலில் பூஜைகளை முடித்துக்கொண்டு அடுத்து சுந்தரபாண்டி கோவிலுக்குச் சென்றோம்.

*

குலதெய்வ வழிபாடு, நம் கலாசாரத்தின் ஒரு இன்றியமையாத பகுதி.  பெரும்பாலும் குலதெய்வங்கள் கிராம தேவதைகளாகவே இருப்பது வழக்கம்.  அவற்றிற்குப் பின்னால் சுவாரசியமான கதையும் ஏதாவது இருக்கும்.  அப்படி ஒரு கதை எங்கள் குலதெய்வத்துக்கும் உண்டு.

அந்தக் கிராமத்தில் இருந்த அக்கா, தங்கை இருவர் திருமணமாகி அவரவர் கணவர் வீட்டில் வசித்து வந்தனர்.  வெளியூரில் இருந்த அக்கா, ஒருநாள் தங்கையைப் பார்க்க வந்திருந்தாள்.  தங்கைக்குக் குழந்தைகள் மொத்தம் பத்து.  அக்காவுக்கோ குழந்தைகள் இல்லை.  கல்யாணம் ஆன பின்பு அப்போதுதான் அக்கா முதல் முறையாகத் தங்கையைப் பார்க்க வருவதால், அவளுக்குக் குழந்தைகள் பிறந்த விஷயம் தெரியாது.

தங்கையிடம் பேசிய ஊர்க்காரர்கள், "உன் அக்காவுக்குக் குழந்தைகள் இல்லை.  உன் குழந்தைகளைப் பார்த்தால், அவள் வருத்தப்பட்டு அதனால் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகலாம்.  அதனால் உனக்குக் குழந்தைகள் பிறந்த விஷயத்தை மறைத்துவிடு" என்று உசுப்பிவிட்டனர்.  அவர்கள் பேச்சைக் கேட்ட தங்கை, தன் பத்துக் குழந்தைகளையும் பெரிய கூடைகளில் மறைத்து வைத்தாள்.

அக்கா வந்து தங்கையைச் சந்தித்தாள்.  குடும்ப விவகாரங்கள் எல்லாம் பேசிவிட்டு, அவள் தன் தங்கையிடம் "உனக்குக் குழந்தைகள் எத்தனை?" என்று கேட்க, தங்கையோ "எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை" என்று சொல்லிவிட்டாள்.

ஊருக்குத் திரும்புவதற்காக அக்கா கிளம்பிய சமயம், கவிழ்த்து வைத்திருந்த கூடைகளிலிருந்து கிச்மூச்சென்று சத்தம் வருவதைக் கவனித்தாள்.  "என்ன கூடைக்குள்?" என்று தங்கையிடம் கேட்க, அவளோ "அது நான் வளர்க்கும் கோழிக் குஞ்சுகள்" என்றாள்.  மேலே எதுவும் பேசாமல் அக்கா ஊருக்குக் கிளம்பினாள்.

வழியனுப்பிவிட்டு வந்த தங்கை கூடையைத் திறக்க, குழந்தைகள் எல்லாம் கோழிக் குஞ்சுகளாக மாறியிருந்தன.  பதறிப்போன தங்கை, உடனே அக்காவிடம் ஓடி மன்னிப்புக் கேட்டாள்.  தன்னிடமிருந்த கோழிக்குஞ்சுகளில் ஆறைத் தன்னிடம் வைத்துக் கொண்டு நான்கைத் தன் அக்காவிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னாள்.

அந்தத் தங்கைதான் எங்கள் குலதெய்வம் கோழிப்பரமாயி.  அவள் அக்கா சுந்தரபாண்டி.

(இந்தக் கதையை எனக்குச் சொன்ன அம்மாவுக்கு நன்றி! :) )



தங்கை தெய்வமாக வணங்கப்படும் கோழிப்பரமாயி கோயிலில், அவள் விக்கிரகத்துடன் அருகில் அவள் ஆறு குழந்தைகளும் விக்கிரகங்களாக செதுக்கப்பட்டுள்ளன.




அக்கா சுந்தரபாண்டி கோயிலில் அவள் விக்கிரகமாகவும், அவள் வளர்த்த நான்கு கோழிக்குஞ்சுகள் கற்களாகவும் குறிக்கப்பட்டு இன்றும் பூஜிக்கப்படுகின்றன.




*

பங்குனி உத்திரக் காவடி

மறுநாள் பங்குனி உத்திரத்தன்று, காலை ஆறு மணிக்கு சிறு குழுக்களாக, குடும்பத்தில் பாதி பேருக்கு மேல் காவிரி நதிக்கரைக்கு வந்தோம்.



காவடிக்குப் பூஜை செய்ய ஆரம்பிக்கும் முன்னர், பெரியவர் சிறியவர் அனைவரும் காவிரியில் ஆட்டம் போட்டோம்.


பின்பு, முதலில் காவடியை சுத்தம் செய்யும் வேலை.  இதிலும் அனைவரின் பங்கும் உண்டு.


இது முடிந்ததும், பூஜை.  காஞ்சிபுரத்தில் உள்ள என் தம்பி சிவராமனும், தாம்பரத்தில் உள்ள என் அண்ணன் சீதாராமனும் மந்திரங்களைச் சொல்ல, காவடி எடுக்கப்போகும் இன்னொரு தம்பி ராஜாராமன், பூஜையைச் செய்தான்.


பூஜையின் ஒரு பகுதியாக, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், திரவியப் பொடி என்று அபிஷேகம் செய்யப்பட்டது.

பூஜை முடிந்ததும், எங்கள் பெரியப்பா சங்கரராமன் எடுத்துக் கொடுக்க, தம்பி ராஜாராமன் காவடியைத் தூக்கிக் கொள்ள, நதியைக் கடந்து ஊருக்குள் நுழைந்தோம்.

பிள்ளையார் கோவிலில் சிதறு தேங்காய் போட்டுவிட்டு, அக்ரஹார வீதி வழியாக 'வேல் வேல் வெற்றி வேல்' என்று கோஷங்கள் முழங்க ஒவ்வொரு வீட்டிலும் காவடிக்கான மரியாதை செய்யப்பட, கடைசியில் ஊர் சிவன் கோவிலில் போய் முடித்தோம்.

*

சமூக வாழ்க்கையிலிருந்து பெரும்பாலும் விலகி ஒரு செயற்க்கைத்தனமான, பெரும்பாலும் மனிதர்களுடன் ஓட்டில்லாத ஒரு வாழ்க்கை முறை நம்மில் பலருக்கு ஏற்பட்டு, அது ஒரு கட்டத்தில் வெறுப்பையும் கூட்ட ஆரம்பித்து விடுகிறது.  அப்படிப்பட்ட நேரங்களில், இப்படிப்பட்ட விழாக்களில் பங்கு பெறுவது, நிச்சயம் நம் பழைய வாழ்க்கை முறையைத் திரும்பிப் பார்க்க வைக்கும்; அதைப் பாதுகாத்தும் வைக்கும்.

ஏன் இப்படிப் பாதுகாக்க வேண்டும்?  என்னைப் பொறுத்தவரை, உலகமயமாக்கலினால் பல நன்மைகள் இருந்தாலும், local economy மிகவும் முக்கியமானது என்று நம்புகிறேன்.  என்றாவது ஒருநாள், நாம் திடீரென்று local economy-இன் அவசியத்தை உணரும்போது, இந்த அனுபவங்கள் உதவியாக இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை!