Monday, September 04, 2006

ஊர்வலம்

இரவு உணவை முடித்து விட்டு, லேப்டாப்பை எடுத்து நெட்டில் கனெக்ட் செய்யப் போனேன். இளையராஜாவின் அன்னக்கிளி ரெக்கார்டிங்கில் சதி செய்தது போல சரியான நேரத்தில் கரண்ட் கட்டாகிப் போனது. 'என்னடா இது, இந்த மதுரைக்கு வந்த சோதனை' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கையில், தூரத்தில் தவில் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது. இப்போது நாதஸ்வரமும் ஜால்ராவும் சேர்ந்து கேட்கத் தொடங்கியது.

'மௌலி, சாமி வந்திருக்கு பார்.' - மாமா அழைத்தார். எழுந்து வெளியில் போனேன். தெருவில் ஒரு மாட்டு வண்டியின் மேல் ஒரு சிறிய தேரைச் செய்திருந்தார்கள். மாட்டைக் கட்டும் திசையில் தேரிலே நான்கு குதிரைகளைக் கட்டியிருந்தார்கள் (பொம்மைக் குதிரைகள் தான்!). தேரிலே அம்மன் தங்க, வைர நகைகளில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். தேர் எங்கள் வீட்டைக் கடந்து இடது பக்கமாக இருந்த டொக்கு சந்தில் திரும்பியது. இருபது அடி அந்த சந்தில் சென்றதும், தேர் யூ-டர்ன் அடித்தது. அப்போதுதான் அந்த விஷயத்தைக் கவனித்தேன்.

தேரின் உச்சியில் அணைந்து அணைந்து எரியும் ஒரு சிகப்பு பல்பைப் பொருத்தியிருந்தார்கள். பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது; அதே சமயம் ஆம்புலன்சை ஞாபகப் படுத்தியது. உடனே எனது அறிவுஜீவித்தனமான மூளையில் ஒரு பல்ப்: - சாதாரணமாக பேஷண்ட் ஆம்புலன்சில் இருப்பார், டாக்டர் வெளியில் காத்திருப்பார்; இங்கு டாக்டர் (அம்மன்) ஆம்புலன்சில் இருக்கிறார், பேஷண்ட்கள் (பக்தர்கள்) எல்லாம் வெளியில் காத்திருக்கிறார்கள் என்று. ("டேய், ஓவர் ஸீன்டா" என்று என் மனசாட்சி மனிதன் கிண்டல் செய்கிறான்.)

திடீரென்று தேருக்குப் பத்தடி முன்னால் வெளிச்சம் அடித்தது. என்னவென்று பார்த்தால் யாரோ ஒரு ப்ரகஸ்பதி கரண்ட் கம்பத்தில் கயிரைக் கட்டி அதில் சர வெடியையும், சாட்டை வத்தியையும் கொளுத்திக் கொண்டிருந்தான். இறங்கிப் போய் நாலு அறை விடலாம் போலிருந்தது. அம்மனைப் பார்த்தபடி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன்.

- ஊர்வலம் தொடரும்

Sunday, September 03, 2006

வேதாள ப்ரொக்ராம்

நீண்ட நாட்களாக முடிக்காமல் வைத்திருந்த ஒரு ப்ரொக்ராமை எழுதிக் கொண்டிருந்தேன். விக்ரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் போல அது என்னைப் படுத்திக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அதைக் கொஞ்சமாக வொர்க் செய்ய வைத்துவிட்டு வலையை மேய ஆரம்பித்தேன். திருவாளர் "டுபுக்கு"-வின் ப்ளாக்கின் மேல் எனக்கு அலாதிப் ப்ரியம். சிறிது நேரம் அவர் ப்ளாக்கை மேய்ந்தேன். தூங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, திடீரென என் ப்ரொக்ராம் ஞாபகம் வந்தது. இன்னும் ஒரு தடவை அதை டெஸ்ட் செய்து விடலாமே என்று தோன்றியது. ஆரம்பித்தேன். நிஜமாகவே வேதாளம் போல ப்ரொக்ராம் வேறு சில இடங்களில் பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தது.

உடனே எனக்கு சிங்கப்பூரில் இருந்த போது நண்பர் சிவா அவர் ப்ரொக்ராம் பற்றி அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது -

"மாப்ளே! என் க்ளையன்ட் ரொம்ப ப்ரச்னை பண்ணிணா அவனை ஒரே வரியில ஸைலென்ட் ஆக்கிடுவேன்."

"என்ன அது?"

"ப்ரச்னை பண்ணிணா என் ப்ரொக்ராமை அவன் சிஸ்டம்ல ரன் பண்ணிடுவேன்னு சொல்லிடுவேன். பேசாம போயிடுவான்."

ம்... நாளைக்கு நானும் இதைத்தான் செய்ய வேண்டுமென்ற முடிவோடு படுக்கச் சென்றேன்.